Thursday 23 February 2012

பௌர்ணமியின் சிறப்பு: 
 
பௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும்.
அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்.'
தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி-ஸ்ரீமுருகர் திருமணம் நடப்பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை.
மேலும் பஞ்சகோசங்களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோசமும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி-பரமேஸ்வர வழிபாட்டினாலும், "நமசிவாய' என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெருமளவு நலம் சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறலாம்.


அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது. 


மேலும் பௌர்ணமி திதி என்பது வளர்பிறை திதி ஆகும் அதன் பின் வரும் பிரதமை திதி முதல் அம்மாவசை வரை தான் தேய்பிறை திதி ஆகும் .

No comments:

Post a Comment

Seriale online